மெல்லிய தேகத்தில் சாதாரண நடிகராக, கூட்டத்தில் ஒருவராக, தனது திரைப்பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து, தனது கடின உழைப்பால் உயர்ந்து, தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகராக.. இல்லை! நகைச்சுவை மன்னனாக நம் அனைவரையும் ஆட்சி செய்து வருகிறார் வைகைப்புயல் வடிவேலு அவர்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கியிருக்கிறார்.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையக்கிறார். தற்போது மாமன்னன் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே வடிவேலுவின் ஃபேவரட் கதாபாத்திரங்களில் ஒன்றான நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அதே கதாபாத்திரத்தின் பெயரில் தயாராகி வருகிறது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம். பக்கா காமெடி என்டர்டெய்னராக உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படண்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் நல்ல பாடகராகவும் பல அட்டகாசமான பாடல்களை பாடியுள்ள வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடியிருக்கிறார். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் முதல் பாடலாக வடிவேலு அவர்கள் பாடியுள்ள “அப்பத்தா” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு நடனப்புயல் பிரபுதேவா அவர்கள் நடன இயக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான அப்பத்தா பாடல் இதோ…