தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வருபவர் இயக்குனர் வசந்தபாலன். இவரது இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த அங்காடிதெரு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றதோடு விருதுகளை அள்ளிக் குவித்தது.

அடுத்தடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அரவான், காவியத்தலைவன், ஜெயில் ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், சமீபத்தில் வசந்தபாலன் இயக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. வெயில் படத்திற்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படத்தில் வசந்தபாலன் இயக்கத்தில் பரத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் அநீதி. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை துஷாரா விஜயன் அநீதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவில், M.ரவிக்குமார் படத்தொகுப்பு செய்யும் அநீதி திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அநீதி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அநீதி திரைப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.