தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர். ஆரம்பத்தில் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த பார்வதி நாயர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த உத்தம வில்லன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பார்வதி நாயர் தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட பல படங்களிலும் வெள்ள ராஜா எனும் தமிழ் வெப் சீரிஸிலும் நடித்துள்ள பார்வதி நாயர் கடைசியாக பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 83 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக வைபவ் உடன் இணைந்து நடிகை பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதனிடையே சென்னையில் அமைந்துள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் 9 லட்ச ரூபாய்க்கும் மேலான மதிப்பில் லேப்டாப், செல்போன் (IPhone), விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது சொந்த வீட்டில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயர் நேற்று அக்டோபர் 19ஆம் தேதி ஷூட்டிங் முடித்து வீடு திரும்பிய போது வீட்டில் பொருட்கள் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய பணியாளர் கடைசி சில தினங்களாக பணிக்கு வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த நடிகை பார்வதி நாயர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த பணியாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.