தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு சகாப்தம் தான். 16 வயதிலேயே இசையமைப்பாளராக களமிறங்கிய யுவன் ஷங்கர் ராஜா தனது இசைப் பயணத்தில் தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இன்னும் தொடரும்.

காதல் பாடல்களோ மெலடி பாடல்களோ குத்துப் பாடல்களோ எதுவாக இருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும்போது வேற லெவல் ஹிட்டடிக்கும். சமீபத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான வலிமை திரைப்படத்திலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் விசில் தீம் மியூசிக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனிடையே தனது திரை இசை பயணத்தில் 25 ஆண்டுகளை கடந்து வெற்றி நடைபோடும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் நேற்று (பிப்ரவரி 28-ம் தேதி) 25 YEARS OF YUVAN SHANKAR RAJA நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் 25 ஆண்டு இசைப்பயணம் குறித்து பல நீங்கா நினைவுகளை மீண்டும் திரும்பிப் பார்க்கும் வகையில் பல கேள்விகளை கேட்க யுவன் ஷங்கர் ராஜா அதற்கு பதில் அளித்தார்.

அந்தவகையில் நேற்று யுவன் ஷங்கர் ராஜா தளபதி விஜய் குறித்து பேசிய பொழுது,

"சமீபத்தில் விஜய் சாரின் மேலாளர்,  விஜய்யின் மகன் சஞ்சய் YUVANISM என பெயிரிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பினார் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை, Fantastic Bro என பதிலளித்தேன். பின்னர் தளபதி விஜய் அவர்களை நேரில் சந்தித்தபோது, அவர் என்னிடம் "நான் தான் இந்த போட்டோவை உங்களுக்கு அனுப்ப சொன்னேன் என் பையன் உங்களின் தீவிர ரசிகர். இது யுவனுக்கு தெரியவேண்டும் என்பதால்தான் உங்களுக்கு அனுப்ப சொன்னேன்"

என தளபதி விஜய் கூறியதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்தார்.

இந்த நிகழ்வு குறித்து நேற்றைய நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…