கொரானா நேரத்தில் நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உலகின் "மிகப்பெரிய" விமானம் ரஷியாவால் அழிக்கப்பட்டது.

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள்.

மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இன்று 5-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர்.  உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கொரானா தொற்றின் நெருக்கடியான காலங்களில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை எடுத்து சென்ற நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் “மிரியா”, இந்த விமானம் நடைபெற்று வரும் போரில் கியேவுக்கு வெளியே ரஷ்ய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா டுவிட்டரில், “ரஷியா நமது ‘மிரியா’வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.