மே1  உழைப்பாளர்கள் தினமாக உலகமெங்கும் கொண்டாப்படும் அதே நாளில்,  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான "தல" அஜித் குமார் பிறந்தநாளை  தமிழ் திரையுலக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதிலும் இந்த ஆண்டு மே 1 அஜித்தின் "50"வது பிறந்தநாள்.

 1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தின்  மூலம்  எதிராக அறிமுகமான அஜித் குமார், தொடர்ந்து ஆசை, காதல் கோட்டை ,காதல் மன்னன் ,உல்லாசம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக மாறினார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படம் மூலமாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அஜித்குமாரை "தல" என செல்லமாக  ரசிகர்கள் அழைக்க காரணமாக அமைந்த திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா.

அமர்க்களம் ,தீனா திரைப்படங்களுக்குப் பிறகு அஜித் நடித்த அனேக திரைப்படங்கள் மாஸ் ரகம் தான்.ஆனாலும் இடையிடையே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,முகவரி, பூவெல்லாம் உன் வாசம்  போன்ற படங்களிலும் நடித்தார்.தீனா திரைப்படத்தில் செல்லமாக தல என அழைக்க ஆரம்பித்த ரசிகர் பட்டாளம் அட்டகாசம் திரைப்படத்தில் "தல" - "தல"  என தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடியது  என்றே சொல்லலாம்.
 
 எல்லாவற்றுக்கும் மேலாக மாஸ் என்றாலே அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தான்  என சொல்லும் அளவிற்கு வெளியான திரைப்படம் தான் பில்லா. அஜீத்தின் திரையுலக பயணத்தில் நடிப்பிலும் சரி வசூலிலும் சரி இன்றும் பில்லா தான் மாஸ்.

 தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம் ,விசுவாசம் என மாஸ் காட்டிய அஜித் குமார் கடைசியாக சதுரங்கவேட்டை தீரன் அதிகாரம் ஒன்று  திரைப்படங்களின் இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில்  நடித்த நேர்கொண்ட பார்வை  திரைப்படம் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டது.

போனி கபூரின் தயாரிப்பில் மீண்டும் ஹெச்.வினோத்துடன் இணைந்து அஜித்குமார் நடித்து வெளிவர உள்ள "வலிமை" திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

 அஜித்தின் பிறந்த நாளான மே 1 கட்டாயமாக இத்திரைப்படத்தின் ஒரு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த  ரசிகர்களுக்கு மீண்டும்  ஏமாற்றமே மிஞ்சியது.   கொரோனாவில் இரண்டாவது அலை  தீவிரமாக இருக்கும் இந்த நிலையில்  படத்தின் அப்டேட்டும் இல்லை பிறந்த நாள் கொண்டாட்டங்களும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

 அஜித் பிறந்தநாள் கொண்டாடவில்லை என்றாலும் அவரது ரசிகர்களும் திரையுலகை சார்ந்தவர்களும் நடிகர் அஜித்திற்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில்  வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.