தன் வாழ்நாளில் அரை நூற்றாண்டை  கடக்கிறார், தமிழ் திரையுலகின் தல நடிகர் அஜித் குமார்.  தல-யின் 50வது பிறந்தநாளுக்கு  தமிழ் சினிமா ரசிகர்களும் தமிழ் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 28 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அஜித் குமார்  வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் ரேசிங்கிளும் அதிகம் ஆர்வம் உள்ளவர். உலக அளவில் பார்முலா1 ரேசிங் ,பைக் ரேசிங் ,கார் ரேசிங் என அனைத்திலும்  பங்கு பெற்றுள்ளார்.
 
ஒரு சாதாரண மெக்கானிக்காக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த அஜித்குமார் பல அறுவை சிகிச்சைகள் பல தடைகளை கடந்து  இன்று தமிழ் சினிமாவில்  தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துள்ளார்.

இவரைப்போலவே ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக நுழைந்து ,அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வளர்ந்து ,ஒரு சாதாரண இளம் நடிகராக தமிழ் சினிமாவில் நுழைந்து பல தடைகளை தாண்டி கடின உழைப்பால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர் என்ற அந்தஸ்தை அடைந்து உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
 
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்," நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனை படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துக்கள்- பேரன்புடன் சிவகார்த்திகேயன்"  என தல அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடித்து முதன் முதலில் வெளியான திரைப்படம் மெரினா.  ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன் முதல் முதலில் நடித்த திரைப்படம் நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த ஏகன்.
 
ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த காட்சி இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை. ட்விட்டரில் அஜித்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முதல் முதலில் நடித்த திரைப்படத்தின் காட்சி திரைப்படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் அதன் பின்பு நடித்த திரைப்படங்களின் வாயிலாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
 
தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,மான் கராத்தே, ரெமோ, ஹீரோ என வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நெல்சன் திலீப் குமார் தளபதி விஜயின் 65வது திரைப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை என்ற டைம் ட்ராவல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில்  தென்னிந்தியாவின் முதல் ஏலியன் திரைப்படமான அயலான் திரைப்படத்தில் நடிக்கிறார். அயலான் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் நடிக்கிறார். சமீபத்தில் அயலான் திரைப்படத்திலிருந்து “வேற லெவல் சகோ” என்ற பாடல் ஏ ஆர் ரகுமான் இசையில் அவரது குரலிலேயே வெளிவந்து  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது