பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் குறித்து மும்பை பந்த்ரா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்தின் காதலியான பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ரியா மீது சுஷாந்தின் அப்பா கிருஷ்ண குமார் சிங் தான் புகார் அளித்துள்ளார். ரியா பற்றி சுஷாந்தின் அப்பா கூறுகையில், ரியாவும், அவரை சார்ந்தவர்களும் என் மகன் சுஷாந்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். என் மகனின் பணத்தை சுரண்டிக் கொண்டனர். மேலும் ரியா சுஷாந்தை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார். சுஷாந்தை மனதளவில் டார்ச்சர் செய்திருக்கிறார் ரியா. 

சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரியா அவர் வீட்டிற்கு வந்து லேப்டாப், ஏடிஎம் கார்டு, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார். சுஷாந்தை ரியா தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று தெரிவித்துள்ளார். இச்செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரியா மற்றும் அவரின் குடும்பத்தார் உள்பட 6 பேரின் பெயர்களை கிருஷ்ண குமார் சிங் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்த பாட்னாவிலிருந்து மும்பைக்கு கிளம்பிச் சென்றுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரியா சுஷாந்தின் ஏடிஎம் கார்டை தான் பயன்படுத்தி வந்தாராம். விளம்பர நிகழ்ச்சியில் நடிக்க ரியா ஐரோப்பாவுக்கு சென்றபோது விமான டிக்கெட்டுகளை தவிர மற்ற அனைத்து செலவுகளையும் சுஷாந்த் தான் செய்தார் என்பது தெரியவந்தது. 

ரியா தான் சுஷாந்தை தன் தந்தையுடன் பேசவிடாமல் செய்தார் என்று புகார் எழுந்துள்ளது. மேலும் மும்பையில் வசிக்கும் சுஷாந்தின் அக்காவுடன் ரியா பலமுறை சண்டை போட்டிருக்கிறாராம். சுஷாந்த் மன அழுத்தத்தால் அவதிப்பட்டதை ரியா அவரின் குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் இருந்தாராம்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் தில் பேச்சரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்திருந்தார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த The Fault in our Stars என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்காக இருந்தாலும், காட்சிகளில் கச்சிதம் காண்பித்திருந்தார் சுஷாந்த். சுஷாந்த் இன்னும் நம்முடன் தான் இருக்கிறார் என்று கண்ணீருடன் கொண்டாடினர் சுஷாந்த் ரசிகர்கள்.