வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை எனப்படும் EIA 2020 தொடர்ந்து பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள், சுரங்கம் உள்ளிட்ட விஷயங்கள் அமைப்பதற்காக மக்களிடம் கருத்து கேட்பது கட்டாயம் இல்லை என்கிற மாற்றத்தை கொண்டுவரும் விதி இதில் இருப்பதற்கு இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக நடிகர் கார்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். முயற்சி செய்து தேடாமலேயே தரும்‌ வளத்தை உடைய நாடுகளைச்‌ சிறந்த நாடுகள்‌ என்று கூறுவர்‌, தேடிமுயன்றால்‌ வளம்‌ தரும்‌ நாடுகள்‌ சிறந்த நாடுகள்‌ அல்ல... இந்த குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள்‌ போற்றும்‌ நம்‌ இந்தியாவில்‌, இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல்‌ சட்டங்களே, நம்‌ இயற்கை வளங்களையும்‌ மக்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌ பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால்‌ தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும்‌ 'சுற்றுச்சூழல்‌ தாக்க மதிப்பீட்டு விதிகள்‌ 2020 வரைவு நம்‌ இந்திய நாட்டின்‌ சுற்றுச்சூழலுக்கு மேலும்‌ அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த வரைவு அறிக்கையில்‌, பல முக்கிய திட்டங்களை மக்கள்‌ கருத்து கேட்பு மற்றும்‌ பொது ஆலோசனைகள்‌ இல்லாமலேயே நிறைவேற்றலாம்‌ என்கிற ஒரு சரத்தே, நம்‌ உள்ளத்தில்‌ மிகப்‌ பெரிய அவநம்பிக்கையையும்‌, அச்சத்தையும்‌ உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல்‌ சார்ந்த திட்டங்களையும்‌, அதனால்‌ நமக்கு ஏற்படும்‌ பாதிப்புகளை பற்றியும்‌ மக்களாகிய நாம்‌ பேசவே முடியாது என்பது எந்த வகையில்‌ நியாயமான ஒரு சட்டமாக இருக்கும் ‌? எனவே, இந்த வரைவு அறிக்கையின்‌ சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும்‌ கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின்‌ கவனத்திற்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும்‌ கடைசி வாய்ப்பை நாம்‌ நிச்சயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌ என கேட்டு கொண்டிருந்தார். கார்த்தியின் இந்த அறிக்கைக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் நடிகர் சூர்யா கார்த்தியின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..என அவர் கூறியிருக்கிறார். இதனால் மக்கள் அனைவரும் இது பற்றி நிச்சயம் பேச வேண்டும் என்று சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். சென்ற வருடம் தேசிய கல்வி கொள்கை பற்றி சூர்யா பேசியிருந்தார். குறிப்பாக நுழைவுத் தேர்வுகள் உயர் கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத் தெறிந்துவிடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சூர்யா கைவசம் சூரரைப் போற்று திரைப்படம் தயார் நிலையில் உள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் முதல் பார்வை வெளியாகி திரை விரும்பிகளை கவர்ந்தது.