சமீபகாலமாகவே, யூட்யூப் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கந்த சஷ்டி விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாகக் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டன. மேலும் சேனலுக்கு சீல் வைக்கப்பட்டது. வீடியோவில் பேசியிருந்த விஜே சுரேந்திரன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இந்து மக்கள் பேரவையைச் சேர்ந்த கோபால் என்பவர், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து, அவர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

மற்றொரு பக்கம் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறு பரப்பியதற்காக யூட்யூப் சேனல் பிரபலம் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவானது. இந்தப் புகாரை நியூஸ் 18 நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் சார்பாக அளித்திருந்தனர். தங்கள் மீது அவதூறு பரப்பியதற்கு 1.5 கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு கேட்டிருந்தது நியூஸ் 18 நிர்வாகம்.  இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வலைத்தளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாஸூக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக இனி வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார்.

நியூஸ் 7, காவேரி தொலைக்காட்சி, வின் டிவி உள்ளிட்டவற்றில் பணியாற்றிய மதன் ரவிச்சந்திரன் என்பவர் தற்போது சேனல் விஷன் என்ற பெயரில் யூ ட்யூப் சேனலை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அந்த சேனலில், மதன், திராவிடர் கழகம் மற்றும் திமுகவைத் தொடர்ந்து விமர்சித்து வந்து கொண்டிருந்தார். அப்படி ஒன்றாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ஆடியோ அரசியல் | மான்கறி Vs உதயநிதி | திருப்போரூர் துப்பாக்கிச் சூடு’ என்ற தலைப்பில் மதன் வீடியோ பேசி வெளியிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் தனக்கு எதிராக அவதூறு செய்திகளைப் பரப்பியதாக மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “மதன் ரவிச்சந்திரன் என்பவர் தனது சேனல் விஷன் எனும் யூடியூப் சேனலில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது நான் உள்பட எனது குடும்பத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்தியத் தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து யூ ட்யூப் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் இந்த அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகள், தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.