தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது, ஒவ்வொரு நாளும் 6,500 க்கும் மேல் புதிதாக பதிவாகிவருகின்றது. இந்நிலையில், ஜூலை 31 ம் தேதியுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலம் நிறைவுக்கு வருகின்றது இதற்கு மேலும் பொது முடக்கத்தை நீடிப்பதா இல்லையா என மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் முதல்வர் பழனிசாமி. அதன்பின், தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார் அவர்.

அப்போது, ``அரசு அனைத்து நடவடிக்கைகளையும், சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க, சித்த மருந்தான கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன. பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த கபசுர குடிநீர் வழங்கப்படுவதாகவும் கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை பெற்ற மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் 67,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முககவசங்கள் வழங்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க மக்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்படுகின்றன. 4.18 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டம், சமுத்திர சேது மூலம் 51 ஆயிரம் பேர் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் தான். ரூ. 30,500 கோடி முதலீட்டிற்காண ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

கொரோனா பரவலில் மிக அதிகமாக பாதிப்படைந்த விஷயமான பள்ளிக்கல்லூரி திறப்பு - தேர்வு முடிவு வெளிவரவிருக்கும் தேதிகள் குறித்த கேள்விகள் பலருக்கும் இருந்தாலும், அது தொடர்பாக முதல்வர் சார்பில் இப்போதைக்கு தகவல்கள் கூறப்படவில்லை. 

இதற்கிடையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதுதொடர்பான முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது : ``தற்போதைக்கு, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அட்மிசன் பணிகள் நடைபெறாது. தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பர பலகையாக அமைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்பது. 

தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் செயல்படாமல் உள்ள நிலையில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது குற்ப்பிடத்தக்கதும் அதேநேரம், 10 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரவில்லை. 10ம் வகுப்பிற்கு மட்டும் மதிப்பெண் முறையில் அல்லது கிரேடு முறையில் தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

-ஜெ.நிவேதா