யூடியூப்பில், மாரிதாஸை அறியாதவர்கள் நிச்சயம் குறைவுதான். வலதுசாரி சிந்தனையாளரான மாரிதாஸ், தன்னை ஒரு எழுத்தாளர் என முன்னிறுத்திக் கொண்டு, வலதுசாரி சிந்தனைகள் கொண்ட வீடியோக்களையும், அது தொடர்பான தகவல்களை தன் சேனலில் கூறுவார். தன்னுடைய பதிவுகளில், ஆதாரங்களைக் காண்பித்து, அதை வைத்துப் பேசுவது மாரிதாஸின் வழக்கம். இப்படி மாரிதாஸ் காண்பிக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே, நிறைய பிரச்னைகள் இருப்பதாகவும், அப்படிப்பார்த்தால் ஆதாரத்தையே மாரிதாஸ் தவறாகத்தான் திரட்டுகிறார் என்றும் அவர்மீது குற்றம் சுமத்தி வந்தனர் நடுநிலையாளர்கள். 

இந்நிலையில், ஊடகங்கள் கட்சி சார்போடு இயங்குவதாகக் குற்றம் சுமத்த தொடங்கினார் மாரிதாஸ். இதை நிரூபிக்க, செய்தி நிறுவனங்களில் பணிபுரிவோரின் பின்னணி தன்னிடம் இருப்பதாகக் கூறினார் மாரிதாஸ். அந்த ஆதாரங்களின் மூலம், அவர்களின் கட்சி சார்பைக் காட்டப்போவதாகவும் கூறியிருந்தார் மாரிதாஸ். 

இதில் முதல் நிலையாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் தொடர்பாக வீடியோவொன்றை வெளியிட்டிருந்தார் மாரிதாஸ். அப்படி வெளியிட்ட வீடியோவில், நியூஸ் 18 பணியாளர்கள் சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவர்களின் குடும்பத்தினரைக் குறிப்பிட்டார் மாரிதாஸ். குடும்பத்தில், `இவர்கள் - இந்த கட்சி' என்றுகூறி, குடும்பத்தில் இவ்வளவு பேர் இந்தக் குறிப்பிட்ட கட்சியில் இருப்பதால், இந்த நபரும் இந்தக் கட்சிதான் என்று கூறி இருந்தார் அவர். 

தனது இந்த ஆதாரங்களின் முழு தொகுப்பை, நியூஸ் 18 குழுமத்தின் உயர்நிலை அதிகாரிக்கு அனுப்பியிருப்பதாகவும், அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தனக்கு ஈமெயில் செய்திருப்பதாகவும் கூறினார் மாரிதாஸ்.

இது தொடர்பாக தனியொரு தொடர் வீடியோ போட்ட மாரிதாஸ், தான் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை நியூஸ் 18 தலைமை நிர்வாகம் முதற்கட்ட ஆய்வில் குற்றச்சாட்டு `சரி' எனக் கண்டறிந்து உள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாகக் கூறியிருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அந்நிறுவனம், மாரிதாஸூக்கு நேரடியாக ஈமெயில் அனுப்பியதாகச் சொல்லி, ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தார் மாரிதாஸ். நியூஸ்18 ஆசிரியர் வினய் சராவகி பெயர் இடம்பெற்றிருந்த அந்த ஸ்க்ரீன்ஷாட், சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. 

இது வைராலன மறுதினமேவும் வினய் சராவகி சார்பில், ``எங்களின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இது ஒரு மோசடியானது. இந்நேரத்தில் இவ்வளவுதான் தெரிவிக்க முடியும். இதுதொடர்பாக மேல் நடவடிக்கைக்கு உட்படுத்துவோம்" எனக் கூறப்பட்டது.

வினய் சராவகியும் தன்பெயரில் மோசடி மெயில்கள் ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இப்படி மாரிதாஸ் வெளியிட்ட நியூஸ் 18 இமெயில் மோசடியானது என ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். குறிப்பாக மோசடி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 465, 469, 471 மற்றும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டம் 43-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4 அவதூறு வீடியோக்கள் வெளியிட்டிருந்த நிலையில், 1.5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் மாரிதாஸ் பெயர் பதியப்பட்டதாகவும், ``அடையாளம் தெரியாத போலி இ மெயில் கிரியேட்டர்'' என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வலைத்தளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க மாரிதாஸூக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூஸ் 18 தொடர்பாக இனி வீடியோ வெளியிடவும் தடை விதித்துள்ளார்.

-பெ.மதலை ஆரோன்