தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மெகா ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் ராஜேஷ் விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோமொள் ஜோஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெய்பீம் திரைப்படத்தை தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சூர்யா. இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவருகிறது.

அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். அதன் பிறகு தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த NGK திரைப்படத்தில் இடம்பெற்ற அன்பே பேரன்பே பாடல் யூடியூபில் மாபெரும் சாதனை படைத்துள்ளது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த அன்பே பேரன்பே பாடல் யூடியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.