தமிழ் திரையுலகை ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தையும் கவனிக்க வைத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளத்தையும் அதன் சரியான ஆழத்தைத் தொட்டு நேர்த்தியான திரைக்கதையோடு யதார்த்தமான சினிமாவாக தயாரித்து வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றவர்.

அடுத்ததாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் நாவலை தழுவி உருவாகிறது விடுதலை திரைப்படம். இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் முறையாக இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பணியாற்றுகிறார் வெற்றிமாறன்.

விடுதலை படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்நிலையில் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும் இயக்குனராகவும் வலம்வந்த நடிகை ஸ்ரீபிரியா சமீபத்தில் பேசிய நேர்காணலில் உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன்-வெற்றிமாறன் இணையும் படம் குறித்து நடிகை ஸ்ரீபிரியா பேசிய வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.