திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் சூர்யா தனது ரசிகர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை சீரும் சிறப்புமாய் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யா 40 என அழைத்து வருகிறார்கள். 

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இமானின் பிறந்த நாளான நேற்றைய நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. 

சூர்யா 40 படத்தின் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. சூர்யாவுக்கு நாயகியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.