அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மண்டேலா. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் வெளியான இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் கௌதம் மேனன் தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை வாழ்த்தி ட்வீட் செய்திருந்தார்கள்.

தற்போது மண்டேலா படத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பாராட்டியுள்ளார். வீடியோ கால் மூலமாக யோகி பாபுவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமிக்கு மண்டேலா படம் மிகவும் பிடித்திருக்கிறது. இதனை சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த நடராஜனிடம் தெரிவித்துள்ளார். அப்போது யோகி பாபு எனது நண்பர்தான் என்று உடனே வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமிக்கு உதவியிருக்கிறார்.

இது தொடர்பாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன் நெட்ஃபிளிக்ஸில் மண்டேலா திரைப்படம் பார்த்தேன். நடிகர்கள் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். குறிப்பாக யோகி பாபுவின் நடிப்பு. என்ன ஒரு நடிகர், என்ன ஒரு கதை. அவர் நடராஜனின் நண்பர் என்பது தெரிந்தது. வீடியோ கால் மூலம் என்னை யோகி பாபுவிடம் பேசவைத்தார் என்று ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான கர்ணன் படத்திலும் யோகிபாபுவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. காமெடியன் பாத்திரம் மட்டுமல்லாமல் கதைக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தும் யோகிபாபுக்கு தனி ரசிகர்கள் உண்டு.