திருமணம் என்ற பெயரில் விற்கப்பட்ட 17 வயது சிறுமியை, கணவரின் குடும்பத்தினரால் மாத கணக்கில் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இந்த உச்சக்கட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தியோரியா பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர், கோரக்பூர் ஆவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாகப் பயணித்து உள்ளார். அப்போது, அவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரைப் பார்த்தாலும் பயந்து நிலையில் காணப்பட்டு உள்ளார். இதனால், அந்த பெண் தனது வீட்டை விட்டுத் தப்பித்து வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், அந்த பெண்ணிடம் விசாரித்து உள்ளனர். 

அப்போது, இன்னும் பயந்த நிலையில் அந்த பெண் காணப்பட்டு உள்ளார். இதனால், அந்த பெண்ணை விசாரிப்பதற்காக குழந்தைகள் நல ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், விரைந்து வந்த குழந்தைகள் நல ஆணைய தலைவர் கனீஸ் ஃபாத்திமா அந்த பெண்ணிடம் விசாரித்து உள்ளார். அப்போது, அந்த பெண் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறி அனைவரையும் அதிர வைத்து உள்ளார். 

விசாரணையில், “எனக்கு 17 வயது தான் ஆகிறது” என்று, அந்த சிறுமி கூறியிருக்கிறார். 

“தியோரியாவைச் சேர்ந்த நான் பி.ஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்தேன் என்றும், எனது விருப்பத்தை மீறி எனது பெற்றோரும், தாய் மாமாவும் என்னை கட்டாயப்படுத்திக் கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் எனக்கு திருமணம் செய்து கொடுத்தனர்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “திருமணத்துக்கு பிறகு என்னை கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் மாறி மாறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும். இதனை எனது கணவரிடமும், மாமனாரிடமும் புகாராகக் கூறியபோது, 'திருமணம் என்ற பெயரில் உன்னை உன் தாய் மாமாவிடம் இருந்து விலை கொடுத்து வாங்கி உள்ளதாகவும், அதனால், எங்கள் உறவினர்கள் சொல்வது போல் நீ நடந்து கொள்ள வேண்டும்' என்று அவர்கள் கூறியதாகவும்” அந்த சிறுமி தெரிவித்து இருக்கிறார்.

“இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த நான், இதற்கு உடன் பட நான் மறுத்துவிடவே, என்னை வீட்டிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு கடத்திச் சென்று, அங்கு என்னை சிறை வைத்த நிலையில், கணவரின் சகோதரரும், கணவரின் தங்கை கணவரும் மாதக்கணக்கில் என்னை பல முறை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்” என்றும், அந்த சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “என்னை பாலியல் பலாத்காரம் செய்ததை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு என்னை மேலும் அசிங்கப்படுத்தினர் என்றும், அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து ஒரு வழியாக நான் தப்பித்து, தியோரியாவில் உள்ள எனது மாமா வீட்டிற்கு சென்று, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று நான் கூறியபோது, அதற்கு அவர் மறுத்து விட்டார் என்றும், பின்னர் என் மாமா எனக்கு உதவ மாட்டார் என்று தெரிந்து பிறகு, அங்கிருந்து கடந்த 7 ஆம் தேதி தப்பித்து மறுநாள் ரயிலில் ஏறி இங்கு வந்தேன்” என்றும், அந்த சிறுமி கண்ணீர்மல்க கூறி கதறி உள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், அதனைப் பதிவு செய்துகொண்டு இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளனர். 

முக்கியமாக, சிறுமியின் தாயார், சிறுமியின் மாமா மற்றும் சிறுமியின் கணவரின் குடும்பத்தினர் அனைவரும் தற்போது விசாரிக்கப்பட உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.