தமிழ் சினிமாவின் மிக முக்கிய கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருபவர் இயக்குனர் சுந்தர்.சி. நகைச்சுவை, ஹாரர் காமெடி, கமர்ஷியல், மாஸ் மசாலா படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே அமைத்திருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் சுந்தர்.சி-யின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின்  இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இயக்குனர் சுந்தர்.சி நடிகராக முதல்முறை கதாநாயகனாக நடித்த தலைநகரம் திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். சுந்தர்.சி, பிரகாஷ்ராஜ், வைகைப்புயல் வடிவேலு நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான தலைநகரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

தமிழில் நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடித்த முகவரி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் V.Z.துரை. தொடர்ந்து காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் சுந்தர்.சி யின் இருட்டு திரைப்படத்தை  இயக்கிய  V.Z.துரை தொடர்ந்து தற்போது தலைநகரம் 2 திரைப்படத்தை இயக்குகிறார்.

இயக்குனர் V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய தலைநகரம் 2 திரைப்படம் இன்று பூஜையோடு தொடங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.