தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். சின்னத்திரை மெகா தொடர்களில் நடிகராக, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் வலம்வந்த கவின் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரித்திருக்கும் லிப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார். த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் லிப்ட் திரைப்படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா ஒளிப்பதிவில் ஜி.மதன் படத்தொகுப்பு செய்துள்ள லிப்ட் திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். முன்னதாக லிப்ட் திரைப்படத்திலிருந்து வெளியான இன்னா மைலு எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக லிப்ட் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது. லிப்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இவற்றை அறிவித்துள்ளது.