தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பல வித்தியாசமான புது புது முயற்சிகளையும் சிறந்த நடிப்பையும் தமிழ் ரசிகர்களுக்காக வழங்கி நடிப்பில் தான் ஒரு மகான் என ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் மகா நடிகன் சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் மகான். மகான் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படத்தில் முதல்முறையாக நடிகர் சியான் விக்ரம் உடன் இணைந்து அவரது மகன் நடிகர் துருவ் விக்ரம்  நடித்துள்ளார். மேலும் நடிகைகள் சிம்ரன், வாணி போஜன் & நடிகர்கள் பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான மகான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று  முதல் பாடலாக வெளியான சூறையாட்டம் பாடலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து மகான் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மகான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் மகான் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் சீயான் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணிபோஜன் ஆகியோரின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாக வரும் அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

மகான் திரைப்படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா ஆகிய திரைப்படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.