தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகராக, ஜெய் உடன் இணைந்து சுந்தர்.C நடித்த சைக்கோ திரில்லர் படமான பட்டாம்பூச்சி திரைப்படமும் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து சுந்தர்.C நடித்துள்ள வல்லான், தலைநகரம் 2, ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் காஃபி வித் காதல் திரைப்படம் தயாராகி வருகிறது. காஃபி வித் காதல் படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

நகைச்சுவையான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி வரும் காஃபி வித் காதல் திரைப்படத்தில் ஜீவா, ஜெய், DD-திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் காஃபி வித் காதல் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசைய்மைத்துள்ளார். 

காஃபி வித் காதல் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக காஃபி வித் காதல் திரைப்படத்திலிருந்து வெளிவந்த ரம் பம் பம் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள பேபி கேர்ள் பாடல் வெளியானது. கலக்கலான அந்தப் பாடல் இதோ…