தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் S.J.சூர்யா தற்போது நடிகராகவும் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பல கோடி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை அடித்து வருகிறார்.
அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற மே 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்ஸாகவுள்ள டான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் கடமையை செய் திரைப்படமும் இந்த மே மாதம் ரிலீசாகவுள்ளது. இதனையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் படத்தில் நடித்துவரும் S.J.சூர்யா அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் நடிக்கவுள்ளார். 

மேலும் தற்போது வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ள S.J.சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள வதந்தி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள திரைப்படம் பொம்மை. S.J.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. 

ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள பொம்மை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொம்மை திரைப்படத்தின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.