இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 50வது திரைப்படம் மஹா. இயக்குனர் UR.ஜமீல் இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் முன்னணி நடிகர்களாக நடிகர் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். 

இத்திரைப்படத்தின் இயக்குனர் UR.ஜமீல் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதில் மஹா திரைப்படத்தின் மொத்த பணிகளும் முடிவடையாத நிலையில் ரிலீஸ் குறித்து முடிவு செய்து உள்ளதாகவும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாகவும்  தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

இதனையடுத்து உயர் நீதிமன்றத்திற்கு பதில் மனு அளித்துள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மஹா திரைப்படத்தின் மொத்த பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும்,  மேலும் இயக்குனர் கூறுவது போல திரைப்படத்திற்கு இதுவரை எந்தவிதமான தடையும் உயர் நீதிமன்றத்திலிருந்து விதிக்கப்படவில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார். இப்போது உள்ள இந்தப் பொது முடக்க காலகட்டத்தில்  பல தடைகள் இருப்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்தை சரியான  நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே சிம்பு மற்றும் ஹன்சிகாவின் ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் மொத்த பணிகளும் முடிவடைந்த மகா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ள இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.