ஜாக்சன் துரை பட இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ரேஞ்சர். இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் மற்றும் மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடைசியாக சூரரைப் போற்று படத்தில் காளி வெங்கட் ரோல் பெரிதளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அடர்ந்த காட்டில் கையில் துப்பாக்கியுடன் நின்றபடி சிபி சத்யராஜின் போஸ்டர் வெளியாகி ஈர்த்தது. ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, சிவா நந்தீஸ்வரன் எடிட் செய்கிறார். கபிலன் கலை இயக்கம் செய்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதியுள்ளார். சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தில் நிறைய இடம்பெறுவதால், ஹாலிவுட்டைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணிபுரியவுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துக்கொன்று தின்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் துவங்கி நிறைவு செய்தார் சிபி சத்யராஜ். 

இந்நிலையில் ரேஞ்சர் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நேற்று சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் நட்சத்திரங்கள் படப்பிடிப்பு பணிகளில் வேகம் காட்டி வருவதை பாராட்டி வருகின்றனர் திரை ரசிகர்கள். 

சிபி சத்யராஜ் கைவசம் கபடதாரி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியானது.