இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக கடந்த ஆண்டு (2021) மறைந்த இயக்குனர் SP.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த லாபம் திரைப்படத்திலும், தொடர்ந்து இந்த ஆண்டில் (2022) சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த பெஸ்ட் செல்லர் வெப்சீரிஸிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்ததாக தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கோபிசந்த் மலிநேணி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் #NBK107 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், தொடர்ந்து இயக்குனர் பாபி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் #MEGA154 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் படத்திலும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் ஸ்ருதிஹாசன் அடுத்ததாக பிரபல தமிழ் இயக்குனர் டீகே இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் ஃபேவரட் என்டர்ட்டெயினிங் திரைப்படங்களாக கொண்டாடப்பட்ட யாமிருக்க பயமே மற்றும் கவலை வேண்டாம் ஆகிய படங்களில் இயக்குனர் டீகே அடுத்ததாக காஜல் அகர்வால், ரெஜினா கெஸன்ட்ரா, ஜனனி ஐயர் ஆகியோர் இணைந்து நடிக்கும் கருங்காப்பியம் படத்தை இயக்கி வருகிறார். இதனைத்தொடர்ந்து டீகே இயக்கத்தில் கதாநாயகி முன்னிறுத்தி உருவாகும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.