முன்னாள் மனைவியின் கைகள் கட்டப்பட்டு, 4 வது மாடியில் இருந்து முன்னாள் கணவன் தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
வட மாநிலமான உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, ஆக்ரா பகுதியைச் சேர்நத 30 வயதான ரித்திகா சிங், கடந்த 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவருடன் அவர் வாழ்ந்து வந்தார்.
அத்துடன், 30 வயதான ரித்திகா சிங் எந்நேரமும் சமூக வலைதளத்தில் மூழ்கியே இருந்ததாக கூறப்படுகிறது. இப்படியாக, சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்த ரித்திகா சிங், அவரது சமூக வலைதளத்தில் 44 ஆயிரம் போலோவர்களை கொண்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ரித்திகா சிங் “பேஷன், உணவு மற்றும் பயண ஆலோசனைகளை” சோசியல் மீடியாவின் வழியாக அவர் வழங்கி வந்திருக்கிறார்.
அப்படியான தருணத்தில், ரித்திகா சிங்கிற்கும், அவருடைய கணவரான ஆகாஷ் கவுதம் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஒரு கட்டத்தில் ரித்திகா சிங் தனது கணவனை பிரிந்து தனியாக வசிக்கத் தொடங்கினார்.
இப்படியாக, தனது கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமான பிரோசாபாத்தைச் சேர்ந்த விபுல் அகர்வால் என்பவருடன் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் அராவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 4 வது மாடியில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.
அதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, இந்த விபுல் அகர்வாலுடன் ரித்திகா சிங் வாழத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், நேற்றைய தினம் ரித்திகா சிங்கின் முதல் கணவனான ஆகாஷ் கவுதம், மற்றும் அவனது நண்பர்களான 2 பெண்கள் உட்பட 4 பேர் நேற்று வெள்ளிக் கிழமை அன்று, ரித்திகா சிங் வசித்து வரும் 4 வது மாடி பிளாட்டுக்கு வந்திருந்தனர்.
அப்போது, அவர்கள் அந்த வீட்டின் உள்ளே நுழைந்த உடன், அந்த வீட்டின் உள்ளே கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்த விபுல் மற்றும் ரித்திகா சிங்கை இந்த 4 பேரும் கடுமையாக தாக்கத் தொடங்கி உள்ளனர்.
இதில், விபுலை கடுமையாக தாக்கிய அவர்கள், அந்த வீட்டின் குளியல் அறையில் வைத்து அவரை பூட்டி உள்ளனர்.
அதனையடுத்து, ரித்திகாவின் கைகளை கயிற்றால் கட்டிய அவரது முதல் கணவன், அந்த பெண்ணை, அந்த 4 வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் இருந்து, கீழே தூக்கி வீசி உள்ளார்.
இதில், கைகள் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்தரித்திகா சிங், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது, ரித்திகா சிங்கின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உள்ளனர். அப்போது, இதனைப் பார்த்த 2 ஆண்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
அத்துடன், ஆகாஷ் மற்றும் 2 பெண்களை சுற்றி வளைத்த அக்கம் பக்கத்தினர், அவர்களை அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, ரித்திகா சிங் உடலை மீட்ட போலீசார், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.