இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் வெளியிடாக ஜனவரியில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக விழா காலங்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு தான் ரிலீஸில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அது போக மீதி திரையரங்குகள் மட்டுமே பிற மொழி திரைப்படங்களுக்கு வழங்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து சமீபத்திலும் அறிக்கை ஒன்று வெளியான நிலையில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாகும் சமயத்தில் அதற்கான திரையரங்குகள் கிடைக்குமா என்ற குழப்பம் நிலவியது. இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினை எச்சரிக்கும் வகையிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில்,

தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிடவிடமாட்டோம்! 
விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த்திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தெலுங்குத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 
நேரடித்தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது, தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, காந்தாரா, கே.ஜி.எப். எனப் பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, அப்படங்களுக்கு இருந்த மக்கள் ஆதரவுதான் அளவுகோலாக வைக்கப்பட்டதே ஒழிய, மொழிப்பாகுபாடு ஒருபோதும் காட்டப்பட்டதில்லை. ‘கலைக்கு மொழி இல்லை' தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது. இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன்.

என தெரிவித்துள்ளார். சீமான் அவர்களின் அந்த அறிக்கை இதோ…
 

தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்!https://t.co/mLqH4BjYG1 pic.twitter.com/CgEoSX8AJp

— சீமான் (@SeemanOfficial) November 18, 2022