தமிழ் திரை உலகின் மிக முக்கிய தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கலகத் தலைவன் திரைப்படம் இன்று நவம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது.

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும் நல்ல நல்ல திரைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த ஆண்டில் தளபதி விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம், சீயான் விக்ரமின் கோப்ரா, சிலம்பரசன்.TRன் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்-1, இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் கட்டா குஸ்தி படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். 

பாரம்பரியமான கட்டா குஸ்தி எனும் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி அதிரடியான ஆக்சன் படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் (தெலுங்கில் மட்டி குஸ்தி) விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டா குஸ்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டா குஸ்தி திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

After the success of #FIR, we’re happy to join hands with @TheVishnuVishal again. #GattaKusthi releasing on Dec 2nd, in cinemas near you.@VVStudioz @RaviTeja_offl @RTTeamWorks #AishwaryaLekshmi @ChellaAyyavu @Richardmnathan @justin_tunes @editor_prasanna @anbariv @thanga18 pic.twitter.com/TVoagmqtsa

— Red Giant Movies (@RedGiantMovies_) November 18, 2022