தனித்துவமான நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களை பல ஆண்டுகளாக வயிறு குலுங்க சிரிக்க வைத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம். ஹீரோவாக களமிறங்கி அதற்கேற்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி அவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1,2, இனிமே இப்படிதான், A1 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் சந்தானம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘குலுகுலு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. அதன்படி தற்போது சந்தானம் மீண்டும் தனக்கே உரித்தான பிளாக்பஸ்டர் கதைக்களமான ஹாரர் காமெடியை கையில் எடுத்துள்ளார்.
முன்னதாக ஹாரர் காமெடி கதைகளத்தில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதால் தற்போது சந்தானம் மீண்டும் இந்த கதைகளத்தில் படத்தில் நடித்து உள்ளார். இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘DD ரிட்டர்ன்ஸ்’. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவு மாறுபட்ட ஹாரர் கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பிரபல சுயாதீன ஆல்பம் இசையமைப்பாளர் OFRO இசை அமைத்திருக்கிறார். சாண்டி மாஸ்டர் படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியுள்ள DD ரிட்டன்ஸ் திரைப்படம் நாளை தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சியயை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
பேய்கள் நடத்தும் விளையாட்டு போட்டியில் சந்தனம் அவரது நண்பர்களுடன் கலந்து கொள்ளும் காட்சியில் அலப்பறையான வசனங்களுடன் அமைந்துள்ளது. தற்போது இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மீண்டும் சந்தானத்தின் வெற்றி ஓட்டத்திற்கு துவக்கமாக இப்படம் அமையும் என்று திரையுலகினரால் எதிர்பார்க்கப் படுகிறது.