தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் ராம் சரண் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். சிறுத்தா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ராம்சரண், அதைத்தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.எவடு, ப்ரூஸ்லீ -தி ஃபைட்டர் ,துருவா என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த ராம்சரண், கடைசியாக நடித்த ரங்கஸ்தலம் , வினய விதய ராமா ஆகிய திரைப்படங்கள் மெகா ஹிட்டானது. 

அடுத்ததாக மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கிறார். பாகுபலி என்ற இமாலய வெற்றிக்குப் பிறகு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கும் RRR திரைப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடந்து வரும் RRR படத்தின் இறுதிகட்ட பணிகளுக்கு இடையே திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்நிலையில் நடிகர் ராம்சரணை நேரில் சந்திப்பதற்காக ரசிகர்கள் மூன்று பேர் 231 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு நாட்களாக நடந்தே வந்து இருக்கிறார்கள். இவ்வளவு தூரம் நடந்து வந்த அந்த ரசிகர்களை சந்தித்து பேசிய ராம் சரண் நெகழ்ச்சியில் அவர்களை கட்டியணைத்தும், ரசிகர்களோடு சில நேரம் உரையாடியும் உள்ளார். 

தன்னை சந்திக்க இத்தனை சிரத்தை எடுத்து நடந்தே வந்த ரசிகர்களோடு ராம்சரண் இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை நெகிழ்ச்சியோடு கட்டியணைத்து மதித்து அவர்களோடு உரையாடிய ராம்சரனின் இந்த குணத்தை தற்போது சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.