உலகளவில் உள்ள திரை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நட்சத்திரமாக பிராகாசிக்கிறார். அடுத்தாண்டு ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என ரஜினிகாந்த் அண்மையில் அறிவித்தார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். பெங்களூரில் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் இருந்து ரசிகர்களுக்கு கையசைத்தார். இந்த வீடியோ இணையத்தில் அசத்தி வருகிறது. 

சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ரஜினி நேற்று சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அண்ணன் வீட்டில் தங்கிய ரஜினிகாந்த், தனது பிறந்தநாளை அவருடன் கொண்டாடவுள்ளாராம். 

அதன் பிறகு, டிசம்பர் 15ம் தேதி புறப்பட்டு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸும் தள்ளிப் போடும் நிலை உருவானது. 

அரசியல் வேலைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்துக் கொடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், மீதி 40 சதவீதப் படப்பிடிப்பும் இம்மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது என்ற தகவல் தெரியவந்துள்ளது.