சினிமா உலகில் மக்கள் மனம் கவர்ந்த நாயகனாக திகழ்பவர் நடிகர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தனது சொந்த நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் மூலம் சிறந்த படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். மாஸ் ஹீரோவுக்கான கமர்ஷியல் பாதையில் பயணித்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.  

தீபாவளி விருந்தாக சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியிருந்தது. படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ப்ரைமில் இப்படம் வெளியானது. ரசிகர்கள் தாண்டி திரையுலகினரையும் இந்த படம் பெரிதளவில் ஈர்த்தது. இந்நிலையில் சூர்யா நடித்த படங்களின் சிறந்த வீடியோ தொகுப்புகளை வரிசைப்படுத்தி அமேசான் ப்ரைம் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சூர்யா ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. 

சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சூர்யா 40 படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியிலிருந்து படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ், அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, அன்புள்ள நண்பர்களே, சூர்யா 40 குறித்த உங்கள் ஆர்வத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். சிறப்பான படத்தை உங்களுக்குத் தர நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளில் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ஆந்தாலஜி படத்தின் படப்பிடிப்பை முடித்தார் சூர்யா. கெளதம் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.