பெண் குழந்தையை வளர்க்க மனைவியின் குடும்பத்தாரிடம் மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கேட்ட கணவன் மீது, அவரது மனைவியே போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மும்பை அருகே உள்ள தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் 21 வயது இளம் பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது.

இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது முதல், வீட்டில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்துள்ளது. மேலும், கணவன்  தில்சாத் காபா மோமின் மற்றும் கணவனின் குடும்பத்தினர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்தால், அந்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பிறந்த பெண் குழந்தையை வளர்ப்பதற்காக, மனைவியை தொந்தரவு செய்து அவரது பெற்றோரிடம் இருந்து மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வாங்கி தருமாறு மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, வீட்டை விட்டு வெளியேறி தன் அம்மா வீட்டிற்குச் செல்லாமல், நேரமாக அங்குள்ள மகளிர் காவல் நிலையம் சென்று, தன் கணவன் மீது புகார் அளித்தார்.  

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார். “பெண் குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்திற்காக மனைவியை கொடுமைப்படுத்தியதோடு, அந்த பெண் குழந்தையை வளர்க்க மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கேட்ட கணவர் தில்சாத் காபா மோமின் மற்றும் அவரது பெற்றோர் சோனு காபா மோமின், நவுசாத் மோமின் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின், முடிவில் தான், இந்த புகார் குறித்த உண்மைத் தன்மை தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பலரும் கணவன் தில்சாத் காபா மோமின் மற்றும் அவரது பெற்றோருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, பெண் குழந்தையை வளர்க்க மனைவியின் குடும்பத்தாரிடம் மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கேட்ட கணவனால் கடும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், கணவன் மீது அவரது மனைவியே போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.