கொரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு வரை மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா(சிஐஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) திட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்தது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. 


கொரோனா நோய் பரவல் காரணமாக கூட்டம் கூடுவது நாடு முழுவதும் தடைசெய்யப்படுள்ளது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) வரும் ஜனவரி முதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. 


வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது என மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இது சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைப்பெற்றன.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா , ‘’ மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசும் அதிகளின் மீது அக்கறையோ அனுதாபமோ காட்டவில்லை. ஆனால் மத்திய அரசும், பாஜகவும் அவர்கள் மீது அக்கறை கொண்டு இருக்கிறது. வெளி நாடுகளிலிருந்து நமது நாட்டிற்கு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நல்ல நோக்கத்துடன் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் அந்த நல்ல நோக்கத்தை திசை திருப்பி , அகதிகளுக்கு எதிரானவர்களை போல் மத்திய அரசை சித்தரித்தது எதிர் கட்சிகள். இந்த சட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை வழங்வதை மத்திய அரசு  ஜனவரி முதல் தொடங்கலாம் ” என்று தெரிவித்திருக்கிறார். 


 குடியுரிமை என்பதற்கு பாஜக கூறும் அர்த்தம் என்ன ? மேற்கு வங்க அகதிகள் குடிமக்கள் இல்லையென்றால், அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் எவ்வாறு வாக்களித்தனர்? தேர்தல் நேரத்தில் மட்டும் அவர்களை குடிமக்களாகவும் இப்போது அகதிகள் என்றும் கூறி குடியுரிமை நிறுப்பிக்க வேண்டும் என சொல்லுவது அபத்தமாக உள்ளது. மேலும் தொடர்ந்து மேற்கு வங்காள மக்களை முட்டாளாக்குவதை பாஜக இத்துடன் நிறுத்த வேண்டும் ” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.