இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உலக அளவில் பல கோடி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக தனது நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஜெயிலர் படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி தமிழக ஆளுநர் R.N.ரவி அவர்களை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாக ஆளுநரை நேரில் சந்தித்ததாக தெரிவித்தார். 

தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அல்லது 22ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பதில் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

15th or 22nd...#Jailer Shoot 💥

From the man himself @rajinikanth #Thalaivar #Rajinikanth pic.twitter.com/V8KKjvPWM5

— Rajini Trends Page ᴶᴬᴵᴸᴱᴿ (@RajiniTrendPage) August 8, 2022