தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் ராஜ்கிரண். ஆரம்பத்தில் கதாநாயகனாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ராஜ்கிரண் தொடர்ந்து கதைக்களத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அந்த வகையில் அடுத்ததாக நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்தில் மிரட்டலான முன்னணி கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளார். களவாணி மற்றும் வாகை சூடவா படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பட்டத்து அரசன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இன்று நவம்பர் 25ஆம் தேதி பட்டத்து அரசன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு பட்டத்து அரசன் பட குழுவினரோடு அளித்த பிரத்யேக பேட்டியில் நடிகர் ராஜ்கிரண் தனது திரைப்பயணத்தின் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் அறிமுகப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்கரவர்த்தியாக விளங்கும் வைகை புயல் வடிவேலு அவர்கள் பற்றி கேட்டபோது, “அவன் ஆபீஸ் பாயாக வரவில்லை. நான் தயாரிப்பாளராக இருந்த சமயத்தில் எனது படங்களை விளம்பரப்படுத்தும் வகையில், ரசிகர்களிடமிருந்து விமர்சன கடிதங்கள் பெற்று தினமும் செய்தித்தாள்களில் எழுதிய ரசிகரின் பெயரோடு வெளியிட்டு வந்தேன். அப்போது மதுரையை சார்ந்த எனது தீவிர ரசிகரான இளங்கோவன் அவரது திருமணத்திற்கு நான் தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அவரது திருமணத்தில் கலந்து கொண்டேன். திருமணம் முடித்து மீண்டும் சென்னை திரும்பும் போது வழி துணைக்கு பேச்சு கொடுத்துக் கொண்டே வருவதற்கு டைம் பாஸுக்கு என் நண்பனை அனுப்புகிறேன் என இளங்கோவன் அனுப்பிய நபர் தான் வடிவேலு. அந்த பயணம் முழுக்க கலகலவென பேசிக்கொண்டே வந்தான். அதன் பின்னர் இரண்டு வருடங்கள் வடிவேலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தது. பின்னர் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் சமயத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தலாம் என யோசனை செய்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென வடிவேலுவின் ஞாபகம் வந்தது. அந்த சமயத்தில் இளங்கோவன் அனுப்பிய அந்த கடிதத்தை தேடி பிடித்து தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வடிவேலுவை அடுத்த நாளே வரவைத்து திரைப்படத்தில் நடிக்க வைத்தேன்” என தெரிவித்துள்ளார். ராஜ் கிரணின் அந்த முழு பேட்டி இதோ…