சின்னத்திரையின் வாயிலாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை கலைஞரான ரோபோ ஷங்கர் அவர்களின் மகளான இந்திரஜா ரோபோ ஷங்கர், இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த பிகில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் உலகப்புகழ் ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சர்வைவர் நிகழ்ச்சியில் இந்திரஜா,லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி,பெசன்ட் நகர் ரவி,அம்ஜத்கான், நந்தா,லக்கி நாராயணன்,ஐஸ்வர்யா,சரண் சக்தி,விக்ராந்த்,விஜயலக்ஷ்மி,ராம்,உமாபதி ராமையா,லேடி காஷ்,காயத்ரி ரெட்டி,VJ பார்வதி,ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.

முன்னதாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சர்வைவர்-ல் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது நடிகை இந்திரஜா ஷங்கரும் போட்டியில் இருந்து வெளியேறினார். கடந்த வாரமே காடர்கள் அணியில் இருந்து வெளியேறி மூன்றாம் உலகம் தீவில் இருந்த இந்திரஜா, காயத்ரி ரெட்டியிடம் தோல்வியடைந்ததால் வெளியேறினார்.

இந்நிலையில் போட்டியில் இருந்து வெளியேறிய இந்திரஜா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வைவல் நிகழ்ச்சி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “மிக்க நன்றி!!! மக்களே... நீங்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது... என்னை நானே அறிய எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு சர்வைவர் குழுவிற்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கும் நன்றி... நன்றி!! அர்ஜுன் சார்... சிறப்பாக என்னை வழி நடத்துனீர்கள்... சக போட்டியாளர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றி!!! என் முதுகெலும்பாக எப்போதும் என் பின்னால் நிற்கும் என் குடும்பத்திற்கும் நன்றி!!! ஃபேம்லியோட அருமை தெரியனும்னா சர்வைவர் ஷோ போயிட்டு வாங்க... என தெரிவித்துள்ளார்.