பலகோடி ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின்களில் ஒருவராக திகழும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் நயன்தாரா தொடர்ந்து தனது திரைப்பயணத்திலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் முதல் முறை பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து மலையாளத்தில் நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிக்க அடுத்த ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகியுள்ளது கனெக்ட் திரைப்படம். நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, இடைவேளை இல்லாமல் தொடர்ந்து 95 நிமிடங்கள் ஓடக்கூடிய மிரட்டலான ஹாரர் த்ரில்லர் படமாக நயன்தாராவின் கனெக்ட் படம் தயாராகியுள்ளது. மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளான இன்று(நவம்பர் 18) கனெக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியானது. மிரட்டலான அந்த டீசர் இதோ…