நடிகர் அர்ஜூனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவை நடிகை மேக்னா ராஜ் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தது திரை ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பேரிழப்பாக அமைந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் மேக்னா ராஜ். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த வருடம் ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக மேக்னா ராஜின் கணவரும் நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணமடைந்து தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இது கன்னட திரைத்துறை மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சிரஞ்சீவி சார்ஜா மறைந்த போது நடிகை மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், நீங்களே மீண்டும் வந்து பிறப்பீர்கள் என்று கூறியிருந்தார்.

நடிகை மேக்னா ராஜூக்கு சில மாதங்களுக்கு முன் நடந்த சீமந்த நிகழ்ச்சியில், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேக்னா ராஜுக்கு அவர் சொன்னதை போலவே ஆண்குழந்தைப் பிறந்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்திருப்பதாக ரசிகர்களும் உறவினர்களும் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினமான இன்று சமூக வலைதளத்தில் முதன் முறையாக தனது ஆண் குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை மேக்னா ராஜ். இந்த வீடியோ இணையவாசிகள் மற்றும் ரசிகர்களை எமோஷனலாக்கியுள்ளது. குழந்தைக்கு விரைவிலேயே பிரம்மாண்டமாக பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது. குழந்தையை சின்ட்டு என்றும் ஜூனியர் சி என்றும் அழைத்து வருகின்றனர்.

குழந்தை அப்படியே சிரஞ்சீவி சார்ஜா போலவே இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து, அழகுச் செல்லம் என வாழ்த்தி வருகின்றனர். உங்கள் கணவர் இல்லாத குறையை நிச்சயம் இந்த குழந்தை போக்குவான் என்றும் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பி நடிப்பில் உருவாகியுள்ள செம திமிரு படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)