கேரள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஸ்ரீநாத் பாசி, மோகன்லால் கதாநாயகனாக நடித்த பிரணயம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். ரேடியோ ஜாக்கியாகவும் VJ ஆகவும் மீடியாவில் தன் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீநாத் பாசி தற்போது மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக துல்கர் சல்மானின் உஸ்தாத் ஹோட்டல், பறவ படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த ஸ்ரீநாத் பாசி கும்பளங்கி நைட்ஸ், வைரஸ், அஞ்சாம்பாதிரா, ட்ரான்ஸ், கப்பெலா, ஹோம் உள்ளிட்ட பல படங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர். கடைசியாக மம்முட்டி நடிப்பில் இந்த ஆண்டு (2022) வெளிவந்த பீஷ்ம பருவம் திரைப்படத்திலும் ஸ்ரீநாத் பாஸி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த வரிசையில் ஸ்ரீநாத் பாசி முக்கிய வேடத்தில் நடித்துள்ள சட்டம்பி திரைப்படம் கடந்த செப்டம்பர் 23ஆம் வெளியானது. சட்டம்பி திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் ஸ்ரீநாத் பாஸ் மீது பெண் தொகுப்பாளர்கள் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேட்டியின் போது தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விகளில் கோபமடைந்த நடிகர் ஸ்ரீநாத் பாசி, கேமராக்களை ஆஃப் செய்யும்படி கூறி எழுந்து செல்ல முடிவெடுத்தார். இருப்பினும் ஆத்திரத்தில் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பெண் தொகுப்பாளர்கள் இடம் பேசியுள்ளார். இதனையடுத்து கொச்சியில் உள்ள மரடு போலீசார் ஸ்ரீநாத் பாசியை கைது செய்துள்ளனர். இது குறித்த இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.