சாதாரண மக்களின் வாழ்வியலை படமாக்கும் யதார்த்த சினிமாவை கையாளும் வெகுசில தமிழ் இயக்குனர்களில் மிகவும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனராக இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. கூடல்நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி அடுத்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக சில காட்சிகளுக்கு தோன்றும் நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதி இன்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி-ஆக வளர மிக முக்கிய காரணம் இயக்குனர் சீனு ராமசாமி. 

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம்  விஜய் சேதுபதி என்னும் நடிகனை கதாநாயகனாக  மாற்றினார். தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் அந்த வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் பெற்றது.இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் இணைந்தார் சீனு ராமசாமி. சில காரணங்களால் அந்த திரைப்படம் வெளியாகாத நிலையில், தர்மதுரை திரைப்படத்தில்  மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கூட்டணி அடுத்தப் படமாக தற்போது உருவாகியுள்ளது மாமனிதன்.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.M.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர். 

சமீபத்தில் இத்திரைப்படத்தின் "தட்டிப்புட்டா ...தட்டிப்புட்டா" என்ற முதல் பாடல் இளையராஜா அவர்களின் குரலில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக "ஏ..ராசா" என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. நாளை 11:30 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் குரலில் வெளிவந்த முதல் பாடல் ரசிகர்களின் நெஞ்சில் தாளம் போட்ட நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்த பாடலுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by U1 (@itsyuvan)