செங்கல்பட்டில் வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, செங்கல்பட்டு கே.கே. தெருவைச் சேர்ந்த 30 வயதான கார்த்திக் என்கிற அப்பு கார்த்திக், நேற்று மாலை செங்கல்பட்டு டவுன் காவல் நிலையம் எதிரே டீ குடிக்க வந்திருக்கிறார். 

அந்த நேரத்தில், அவரை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் பட்டபகலில் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும், அவரை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளனர். 

குறிப்பாக, அவரின் அடையாளங்கள் எதுவும் தெரியாமல் அவரது தலையை மிகவும் கொடூரமான முறையில் சிதைத்துவிட்டு, அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றுது.

இதில், 30 வயதான அந்த கார்த்திக், அந்த சம்பவ இடத்திலேயே துடித் துடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். 

அதே போல், செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் 22 வயதான மகேஷ், காய்கறி வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர், தனது வீட்டில் இருந்து வந்த நிலையில், அப்போது அங்கு வந்த இதே கும்பல், வீட்டுக்குள் புகுந்து மகேஷை கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளது.

இப்படியாக, அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார், இருவேறு இடங்களில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில், இன்று காலை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் தினேஷ், மொய்தீன் என்பது தெரிய வந்தது.

ஆனால், தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகிய இருவரும் தப்பி ஓடி முயன்ற நிலையில், போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தினேஷ், மொய்தீன் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீசார் 2 பேர் காயமடைந்து உள்ளதாகவும், அவர்கள் 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.