போலீஸ் வேலை கிடைத்ததால் காதலன் தன்னுடன் பேசாமல் விலகிச் செல்வதாக கூறி, இளம் பெண் ஒருவர் விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் பகுதியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாகர்கோவில் அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்த போது, தன்னுடன் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து உள்ளார்.

இதனால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

கல்லூரி முடித்த பிறகும் அவர்கள் இருவரும் வெளியிலும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் தான், அந்த காதலனுக்கு தற்போது போலீஸ் வேலை கிடைத்து உள்ளது.

இந்த சூழலில் தான், அந்த இளைஞனின் காதல் விசயம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞனின் பெற்றோர், மகனை அழைத்து கண்டித்து உள்ளனர். 

இதனையடுத்து, தனது காதலியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் அவர் முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனையடுத்து, இளம் பெண்ணை மீட்டு அவரது பெற்றோர் மருத்துமனையில் அனுமதித்து காப்பாற்றி உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக இளம் பெண் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட இளைஞரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். 

அப்போது, “தனது காதலியை இன்னும் சில மாதங்களுக்கு பிறகு, திருமணம் செய்து கொள்வதாக” அவர் உறுதி அளித்திருக்கிறார். இதனால், அந்த இளம் பெண் சமாதானம் அடைந்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, அவர்களது காதல் தொடர்ந்துள்ளது. 

இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த இளைஞன் தனது காதலியிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம் பெண், நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ”என்னை, என் காதலனுடன் சேர்த்து வைக்கும் படி” கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறிதது அந்த இளைஞனையும், இந்த இளம் பெண்ணையும் போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். 

அப்போது, காதலர்கள் இருவரும் நேற்று முன்தினம் காவல் நிலையத்துக்கு வந்திருந்தனர். ஆனால், காவல் நிலையம் வந்து உள்ளே வராமல் வெளியே நின்று கொண்டிருந்த அந்த இளம் பெண், திடீரென ஒழுகினசேரியில் இருந்து வடசேரி செல்லும் ரோட்டுக்கு ஓடியதாகவும், அங்குள்ள ஒரு பெட்டிக்கடை அருகே அந்த இளம் பெண் விஷம் குடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்த விஷ பாட்டிலுடன் மீண்டும் அந்த பெண் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார்.

அதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அவர், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிரகமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, காதலன் தன்னுடன் பேச மறுத்ததால், இளம் பெண் விஷம் குடித்து விட்டு காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.