நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் சார்பில் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அடுத்ததாக ராக்கி திரைப்பட உரிமையைக் கைப்பற்றி வழங்க உள்ளனர்.

இந்த சூழலில் தற்போது கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்து வழங்குவதாக ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன், “நயன்தாரா நாம் தயாரித்து வழங்குவதற்காக நீ தேர்ந்தெடுக்கும் தனித்துவமான கதைகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். 

புதுமுகங்கள் நடித்த இந்த திரைப்படத்தை பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்துகொள்கிறது. இதுகுறித்த தகவலை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

நேற்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிக்கையில், ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. 

முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குனராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.

உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வாறு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கூழாங்கல் படத்தின் உரிமையைக் கைப்பற்றியிருப்பது தொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிஎஸ் வினோத் ராஜ் இயக்கிய இந்தத் தரமான படத்தைத் தயாரித்ததில் மகிழ்ச்சி என்று பதிவு செய்திருந்தார்.