"சினிமா ஒரு தேவதை மாதிரி!"- ஜிகர்தண்டா டபுள் X படப்பிடிப்பில் யானைகள் காட்சியில் நடந்த மேஜிக்... கார்த்திக் சுப்பராஜின் சுவாரசியமான பேட்டி இதோ!

ஜிகர்தண்டா XX பட யானைகள் காட்சி குறித்து மனம் திறந்த கார்த்திக் சுப்பராஜ்,karthik subbaraj about jigarthanda double x elephant scene magic | Galatta

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்கு பிறகு, பேட்ட படத்திற்கு பின் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் படம் ஜிகர்தண்டா டபுள் X. தீபாவளி வெளியீடாக ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்த ஜிகர்தண்டா டபுள் X ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு லைட்ஸ் கேமரா அனாலிசிஸ் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா XX படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், சினிமா என்ற கலையின் மீதான தனது மதிப்பையும் அதை மதிப்பதன் மூலம் தான் அடைந்த அதிசயமான விஷயங்கள் குறித்தும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மனம் திறந்து பேசினார். அப்படி பேசும்போது, “எனக்கு பொதுவாகவே தோன்றும்… திரைப்படங்களை எடுக்கும் போதும் கூட, நாம் திரைப்படங்களை எடுப்பதில்லை. நான் ரசிகர்களின் பார்வையில் இருந்தும் சொல்கிறேன். சினிமா என்கிற கலையை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் அது நிச்சயமாக நம்மை விட்டு போய்விடும் என்பது எனது நம்பிக்கை. ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில் பார்த்தீர்கள் என்றால், பொட்டிக்கடை பழனி ஒரு வசனம் சொல்லுவார், “வாய்ப்பு என்பது ஒரு தேவதை மாதிரி நீ அதை மதித்தால் அது மீண்டும் மீண்டும் வரும்” என்று இருக்கும். அது மாதிரி தான் சினிமாவும். “சினிமாவும் ஒரு தேவதை மாதிரி அதை நீங்கள் மதித்து அதை நீங்கள் காதலித்தால் அது உங்கள் கூடவே இருக்கும்.” நீங்கள் என்னதான் எழுதிக் கொண்டு போனாலும் சில விஷயங்கள் நடப்பது என்பது நம் கையிலே கிடையாது. ஒரு உதாரணத்திற்கு ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் வீட்டின் பின்புறத்தில் யானை வரும் ஒரு காட்சி இருக்கும். அந்த யானைகள் நிஜ யானைகள் தான். சினிமாவில் நடிக்கக்கூடிய யானைகள் தான். அந்தக் காட்சியில் அந்த யானைகள் மிகவும் எமோஷனலாக நடித்திருந்தன. அதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. அது என்னுடைய திறமையும் இல்லை. அதற்கு நான் யார் என்று தெரியாது. இவர் இயக்குனர் இவர் இயக்குகிறார் நாம் நடிப்போம் என்றெல்லாம் அது நடிக்கப் போவதும் கிடையாது. அது பற்றி யானை பாகன்கள் எல்லாம் சொல்லும்போது, "சார் யானைக்கு அந்த மூடு இல்லனா நம்ம ஒன்னும் பண்ண முடியாது சார் அன்னைக்கு ஒன்னும் பண்ணலனா பண்ணல அவ்ளோதான் சார்" என சொன்னார்கள். நான்கு நாட்கள் அந்த காட்சிகளுக்கு நடிகர் நடிகைகளுக்கு டேட்ஸ் போட்டு போவது போல தான் யானைகளுக்கும் தயாராகி போனோம். அந்த குறிப்பிட்ட காட்சியை மொத்தமாக ஒரு மணி நேரத்தில் படமாக்கினோம். அந்த யானைகள் வரவேண்டும் அதன் கண்களில் ஒரு விஷயத்தை காட்ட வேண்டும். ஆனால் அன்று ஏதோ ஒன்று நடந்தது அன்று சினிமா ஏதோ கொடுக்கிறது என்று நான் உணர்ந்தேன். அந்த காட்சியில் நாங்கள் என்ன அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தோமோ அது மிகவும் உண்மையாக இருந்ததால் அது யானைகளுக்கும் புரிந்ததாக நினைக்கிறேன். அதனால்தான் அந்த காட்சியில் அந்த யானை மிகவும் நன்றாக நடித்தது." என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.