நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த மலையாள படமான காதல் - தி கோர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. முதன்முறையாக நடிகர் மம்மூட்டியுடன் இணைந்த ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் தான் காதல் - தி கோர். முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி காதல் - தி கோர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி மற்றும் ஜோதிகா உடன் இணைந்து லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி, சுதி கோழிக்கோடு, அனகா அக்கு உள்ளிட்டோரும் காதல் - தி கோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து காதல் - தி கோர் திரைப்படத்தில் கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, காதல் - தி கோர் படத்திற்கு மேத்யூஸ் புலிக்கண் இசையமைத்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2022 நவம்பர் மாதத்திற்குள் காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.தனது முதல் மலையாள படத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்திருப்பதாக ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. மிகவும் அழுத்தமான ஒரு கதை களத்தில் விறுவிறுப்பான திரைப்படமாக இருக்கும் என இந்த காதல் - தி கோர் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் நடிகர் மம்மூட்டி உடன் இணைந்து முதல்முறையாக நடிகை ஜோதிகா கதையின் நாயகியாக நடித்திருக்கும் மலையாள படமான காதல் - தி கோர் திரைப்படம் வருகிற நவம்பர் 23ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல் - தி கோர் திரைப்படத்தின் விறுவிறுப்பான அந்த ட்ரெய்லர் இதோ…
இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஜோதிகா மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹொவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்காக 36 வயதினிலே படத்தில் நடித்து சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி, தொடர்ந்து கதாநாயகியை முன்னிறுத்தும் கதை களங்கள் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்திருக்கும் ஜோதிகா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பயோபிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் “ஸ்ரீ” திரைப்படம் வரும் 2024ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் உடன் இணைந்து மற்றொரு பாலிவுட் படமாக பிளாக் மேஜிக் எனும் படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. அதேபோல் நடிகர் மம்மூட்டி அவர்களை பொறுத்த வரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு விறுவிறுப்பான திரில்லர் படமாக அவரது நடிப்பில் வெளிவந்த கண்ணூர் ஸ்குவாட் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து யாத்ரா 2, டர்போ, பிரம்மயுகம், பஸூகா ஆகிய படங்கள் அடுத்தடுத்து மம்முட்டி நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.