இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பிவிஆர் லிமிடெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைப்பதாக இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்கள் ஒன்றிணைந்த புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அஜய் பிஜிலியும் செயல் இயக்குனராக சஞ்சீவ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

எனவே ஏற்கனவே இருக்கும் பிராண்ட்டிங்களுடன் இணைந்து பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இந்த புதிய நிறுவனம் இயங்க உள்ளது. முன்னதாக 73 நகரங்களில் 181 சொத்துக்களில் 871 திரையரங்குகளை நடத்தி வரும் பிவிஆர் நிறுவனம் நாடு முழுவதும் 72 நகரங்களில் 160 சொத்துக்களில் 675 திரைகளை நடத்திவரும் ஐநாக்ஸ் நிறுவனத்துடன் இணைகிறது. 

இந்த இணைப்பால் இந்தியாவில் மொத்தமாக 109 நகரங்களில் 341 சொத்துகளில் 1546 திரைகள் இயங்க உள்ளது. இதனால் இந்தியாவிலேயே அதிக திரைகளை இயக்கும் மிகப்பெரிய நிறுவனமாக பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனம் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.