2005-ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி – விஷால் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு உருவாகிய திரைப்படம் சண்டக்கோழி 2. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

சண்டக்கோழி 2 படத்திற்காக ஃபைனான்சியர் விஜய் கோத்தாரியிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயை திருப்பி தராததால் பைனான்சியர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பில் ரூபாய் 50 லட்சத்தை விஷால் திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளார். 

விஷால் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலின் லுக்கை இன்று டிசம்பர் 17 வெளியிட்டது படக்குழு. 

கையில் துப்பாக்கியுடன் மாஸான லுக்கில் இருந்தார் புரட்சி தளபதி விஷால். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் மலேசியாவில் முக்கிய காட்சிகளைப் படமாக்க உள்ளது படக்குழு. 

விஷால் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் சக்ரா. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கிய இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிளான ஹர்லா ஃபர்லா பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.