கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அன்னா பென். அந்த படத்தை தொடர்ந்து ஹெலன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். தற்போது நடிகை அன்னா பென் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பதிவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்ஸ்டா ஸ்டோரீஸில் அன்னா பென் கூறியிருப்பதாவது,

சமூக வலைதளங்களில் அடிக்கடி கோபத்தை காட்டும் ஆள் இல்லை நான். ஆனால் இன்று நடந்ததை என்னால் சும்மாவிட முடியாது. கூட்டம் இல்லாத லுலு சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு ஆண்கள் என்னை கடந்து சென்றார்கள். அதில் ஒருவர் போகிற போக்கில் என் பின்புறத்தை தொட்டுச் சென்றார். அவரின் செயலால் அதிர்ச்சி அடைந்ததால் உடனே என்னால் ரியாக்ட் செய்ய முடியவில்லை. 

தெரியாமல் நடந்துவிட்டது என்று நினைக்கத் தோன்றினாலும் ஒரு விஷயம் சரியில்லை என்றால் நம்மால் அதை உணர முடியும். இதை என் சகோதரி பார்த்துள்ளார். உடனே அவர் என் அருகில் வந்து நீ ஓகேவா என்று கேட்டார். அந்த நபர் வேண்டுமென்றே தான் அப்படி செய்தார் என்பது என் சகோதரிக்கும் தெரிந்துள்ளது. நான் அவர்களை நோக்கிச் சென்றபோது என்னை கண்டுகொள்ளவில்லை. அந்த நபர் செய்தது எனக்கு புரிந்துவிட்டது என்பதை அவருக்கு தெரிய வைத்தேன். 

அந்த இருவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள். இதையடுத்து காய்கறிகள் கவுண்ட்டரில் இருந்த என் அம்மா மற்றும் சகோதரர் இருக்கும் இடத்திற்கு சென்றோம். அந்த இரண்டு பேரும் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். என் அம்மாவும், சகோதரரும் பொருட்களை வாங்குவதில் பிசியாக இருக்க, நானும், சகோதரியும் பில் போட சென்றோம். இம்முறை அந்த இரண்டு பேரும் என்னுடனும், சகோதரியுடனும் பேசினார்கள். 

பேசிக் கொண்டே அருகில் வர முயன்றார். நான் நடித்த படங்களின் பெயர் தெரிய வேண்டுமாம். நாங்கள் பதில் அளிக்காமல் சென்றோம். என் அம்மா வருவதை பார்த்து அவர்கள் சென்றுவிட்டனர். தற்போது டைப் செய்யும்போது அவர்களிடம் இப்படி சொல்லியிருக்கலாமே, செய்திருக்கலாமே என்று பல யோசனை வருகிறது. ஆனால் அங்கு நான் எதுவும் செய்யவில்லை. இங்கு சொல்வதால் எனக்கு ஒரு திருப்தி. அவர்கள் மீண்டும் இது போன்று செய்வார்கள் என்பதை நினைத்தால் தான் கோபம் வருகிறது. எனக்கு இது போன்ற அனுபவம் ஏற்பட்டது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் கடினமாக உள்ளது.

பெண்ணாக இருப்பது சோர்வாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது எல்லாம் உஷாராக இருக்க வேண்டியுள்ளது. குனியும் போதும், திரும்பும்போது என் உடையை கவனிக்க வேண்டியுள்ளது. கூட்டத்தில் சென்றால் மார்பக பகுதியை கையை வைத்து பாதுகாக்க வேண்டியதாக உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த விஷயங்களை செய்ய வேண்டிய என் அம்மா, சகோதரி, தோழிகளை நினைத்து கவலைப்படுகிறேன். இது எல்லாம் இவர்கள் போன்ற மோசமான ஆண்களால் தான். எங்களின் பாதுகாப்பை பறித்துவிட்டீர்கள். இதை படிக்கும் ஆண்களே, நீங்கள் எப்பொழுதாவது எந்த பெண்ணிடமாவது மோசமாக நடந்திருந்தால் உங்களுக்கு நரகம் தான். 

என்னிடம் தவறாக நடந்த இரண்டு பேரை போன்று வேறு யாரும் தப்பித்துவிடக் கூடாது என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். இதை படிக்கும் பெண்களே, என்னை போன்று இல்லாமல் அது போன்ற ஆண்களை அறைய உங்களுக்கு தைரியம் இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.