கடந்த 2018-ம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 96. இதில் சிறு வயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கெளரி கிஷன். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் கெளரி கிஷனுக்குப் பல்வேறு படங்களில் வாய்ப்புகள் வந்தன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யோடு முக்கிய ரோலில் நடித்திருந்தார் கௌரி. படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃபில் முக்கிய காட்சிகளில் நடித்து அசத்தியிருந்தார். தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் கர்ணன் படத்தில் நடித்துள்ளார் கௌரி. மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடித்துள்ளார் கௌரி. 

தற்போது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கெளரி கிஷன். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில் கெளரி கிஷனுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக கெளரி கிஷன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியிருப்பதை எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நல விரும்பிகளுக்குத் தெரிவிக்கவே இதைப் பதிவிடுகிறேன். கடந்த வாரத்திலிருந்து நான் வீட்டுத் தனிமையில், நல்ல கவனிப்பில் இருக்கிறேன். 

மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றித் தேறி வருவதால் கவலைப்பட எதுவுமில்லை. முழுமையாக குணமாகும் வரை நான் பொறுமையாகக் காத்திருந்து, ஓய்வெடுத்து, உங்கள் அத்தனை பேரின் அன்பான வாழ்த்துகளையும் படிக்கப் போகிறேன் ஏனென்றால் அவற்றுக்குக் கண்டிப்பாகப் பலன் உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அக்கறையுடன் கெளரி கிஷன் பதிவு செய்துள்ளார். 

மேலும், இந்தக் கடிதத்துடன், கடந்த இரண்டு வாரங்களில் என்னுடன் தொடர்பில் இருந்திருந்தால், அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருந்தால் தயவுசெய்து உங்களைப் பரிசோதித்து, கிருமி தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையானதைச் செய்து கொள்ளுங்கள் என்றும் கெளரி கிஷன் குறிப்பிட்டுள்ளார். 

பாலிவுட் நடிகை ஆலியா பட், கிரிக்கெட் வீரர் மற்றும் நடிகர் இர்ஃபான் பதான் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.